'மலையகத்தில் 52 வீதமானோர் நீண்டகால ஏழ்மை நிலையில்..." அரசாங்கம் தகவல்

மலையக பகுதியில் 52 சதவீதமானோர் நீண்டகால ஏழ்மை நிலையில் உள்ளார்கள் என கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார்.

பாராளமன்றில் நேற்று உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர்,

அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக விசேட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
  
இதேநேரம் இங்கு உரையாற்றிய பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா வரையில் சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாகவுள்ளோம்.
இந்த சம்பள அதிகரிப்பை வழங்க ஏதேனும் புதிய முறைமை இருக்குமாக இருந்தால் அதனூடாகவேனும் இந்த சம்பள அதிகரிப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
எவ்வாறாயினும் நாங்கள் வழங்கிய வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்ற தேவையான விடயங்களை மறுசீரமைத்து வருகின்றோம். இதனை கைவிட மாட்டோம். நிச்சயமாக இதனை நிறைவேற்றுவோம். நீங்கள் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குங்கள். இந்த சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாகும். ஏதேனும் தொழிற்துறையை பாதுகாக்க வேண்டும். அப்போதே தொழிலாளர்களும் பாதுகாக்கப்படுவர். இதன்படி எல்லாம் பாதுகாக்கப்படக்கூடிய முறைமையொன்றை தேடுகின்றோம். பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. புதிய முறைமைகளை தேடுவோம். அதற்காக ஒத்துழைப்புகளை வழங்குங்கள் என்றார்.